காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கட்சி க்கூட்டம் நடத்தலாமா?

0
8

வால்பாறை, : வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கட்சிக்கூட்டம் நடத்த போலீசார் தடை விதிக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வால்பாறை காந்திசிலை வளாகம் கடந்த, 20 ஆண்டுகளாக தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் காந்திசிலை வளாகத்தில் இருந்து தான் புறப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறையில் சமீப காலமாக அரசியல் கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை காந்திசிலை வளாகத்தில் நடத்தப்படுகின்றன. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

எஸ்டேட் பகுதியில் இருந்து, வால்பாறைக்கு வந்து அத்தியாவசியப்பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் வால்பாறை நகருக்கு வந்து செல்கிறோம்.

இந்த நாளில், காந்திசிலை வளாகத்தில் பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து கட்சிக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதால், பஸ்கள் காந்திசிலை வருவதில்லை.

இதனால், ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து, காய்கறி மார்க்கெட் பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது.

அரசியல் கட்சியினரின் இந்த செயலால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, கட்சிக்கூட்டங்களை அண்ணாதிடலில் மட்டுமே நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும். காந்திசிலை பஸ் ஸ்டாண்டை மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.