கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் வென்றவர்களுக்கு பரிசு வழங்கல்

0
7

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு துாய்மை பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி, உறுதி மொழி எடுக்கப்பட்டது.

பேரூராட்சித்தலைவர் அகத்துார் சாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சையது அபுதாகீர், செயல் அலுவலர் மங்களேஸ்வரர், அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி நகர தி.மு.க., சார்பில், சமத்துவ பொங்கல் விழா மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமிவிழாவை துவக்கி வைத்தார். அதில், கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், உரியடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், ஆட்டுக்கிடாய் சண்டை, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆனைமலை புலிகள்காப்பகம் நாகரூத் மலை கிராமத்தில், இயற்கையை நேசி அறக்கட்டளை சார்பில், பழங்குடியின மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சப் – கலெக்டர் கேத்ரின் சரண்யா விழாவை துவக்கி வைத்தார்.

அறக்கட்டளை சார்பில், 13 குடும்பங்களுக்கு வேட்டி, சேலை, புத்தாடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பொங்கல் வைக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்கையை நேசி அறக்கட்டளை நிர்வாகிகள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆனைமலை அருகே தம்பம்பதியில், மகளிர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி எம்.பி., தலைமை வகித்தார். மகளிர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியை சேர்ந்த நிர்வாகிகள் நிவேதா, ஜெசிகா தலைமையில், ஸ்ரீ அனுஜா, தீபிகா முன்னிலை வகித்தனர்.

உடுமலை

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ கல்வி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். தேஜஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் சக்ரபாணி, சங்க செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.

பொங்கல் விழாவையொட்டி லக்கி கார்னர், ஓட்டபந்தயம், கதை, கவிதை, கட்டுரை போட்டிகள் நடந்தன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொறியாளர் சம்பத்குமார் பரிசுகளை வழங்கினார். மேலும், பொங்கல் விழாவையொட்டி மாணவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள நுால்கள் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், ஆசிரியர் சங்கரேஸ்வரி, கீதா மற்றும் மாணவர்களின் பெற்றோரும் விழாவில் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

– நிருபர் குழு –