கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி மாநில அளவிலான மணல் சிற்ப போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், பாட்டு, நடனம், நாடகம், ஓவியம், பேச்சுப்போட்டி, மணல் சிற்பம் மற்றும் பல போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் பள்ளியளவில் போட்டிகள் துவங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவு வரை நடத்தப்படுகிறது.
இந்த கலைத் திருவிழா போட்டியில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி பிரியதர்ஷினி பங்கேற்று, பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார். இதை தொடர்ந்து மாநில அளவிலான இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த போட்டியானது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், கவின்கலை, நுண்கலை பிரிவிற்கான போட்டியில், ‘இயற்கை பாதுகாப்பு’ பற்றிய மணல் சிற்பம் செய்து மாநில அளவில் முதல் இடம் பிடித்தார்.
இம்மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் பிற ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் பாராட்டினர்.
மாணவி பிரிய தர்ஷினி கூறுகையில்,” மணல் சிற்பம் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி வரும் வரை ஓவியா ஆசிரியர் கவுசல்யா உறுதுணையாக இருந்தார். மேலும், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊக்கப்படுத்தினர்” என்றார்.
ஓவிய ஆசிரியர் கவுசல்யா கூறியதாவது:
மாணவி பிரியதர்ஷினி மணல் சிற்பம் மற்றும் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்தார். இதை தொடர்ந்து அவரை பல போட்டிகளில் பங்கேற்கச் செய்தோம்.
தற்போது நடந்த கலைத் திருவிழா போட்டியில் மணல் சிற்பம் செய்வதில் மாநில அளவில் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இது மட்டுமின்றி, மாவட்ட அளவில் ஓவிய போட்டியில் பரிசு பெற்றுள்ளார். மேலும், பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.