வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பம் வேளாண் பல்கலைக்கு தேசிய பதிப்புரிமை

0
8

கோவை: கோவை, வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின், ‘நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு’ தொழில்நுட்பத்துக்கு, தேசிய பதிப்புரிமை வழங்கப்பட்டுள்ளது

வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையமானது, நடுத்தர கால அளவிலான பருவநிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ‘ஐகான்’ தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி, தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில், கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பாஷ் நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி, தினசரி உயர் தரத்திலான தரவுகளைக் கணித்து வெளியிடப்படும் இத்தகவல்கள், வேளாண் பயன்பாட்டுக்கான துல்லிய, தெளிவான முன்னறிவுப்புகளாக உள்ளன.

மூன்று முதல் ஏழு நாட்கள் வரையிலான, நடுத்தரகால முன்னறிவிப்புகள் இவ்வகையில் வெளியிடப்படுகின்றன. சரியான நேரத்தில் வெளியிடப்படும் இந்த பருவநிலை முன்னறிவுப்புகளால் விவசாயிகள், பருவநிலையை அறிந்து பயிர் சேதங்களைத் தவிர்க்கவும், உரிய சாகுபடி நடைமுறைகளைப் பின்பற்றவும், முன்னெச்சரிக்கையோடு செயல்படவும் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளன.

இத்தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்பட்டு, பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிடப்பட உள்ளது. இத்தொழில்நுட்பத்துக்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள் அலுவலகம், பதிப்புரிமை வழங்கியுள்ளது.