குழந்தை, பெண்ணை கடித்த வெறி நாயால் மக்கள் பீதி

0
8

போத்தனூர்: கோவை, மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்டது, காளியாபுரம். இங்குள்ள வினாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு ஒன்றரை வயதான முகில் எனும் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, அப்பகுதியில் சுற்றிய வெறிநாய் ஒன்று கடித்தது. நெற்றி, கண் புருவத்தில் காயமேற்பட்டது.

தொடர்ந்து அந்நாய் அங்கிருந்து ஓடி, ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ரோட்டில் நடந்து சென்ற முனியம்மாள்.50 என்பவரை கடித்தது. இதில் வலது கன்னம், இரு கைகளில் காயமேற்பட்டது.

இருவரும் மதுக்கரை அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை பெற்ற பின், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியினர் கடும் பீதியடைந்துள்ளனர்.

தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் விலங்குகள் நல அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் செய்கின்றனர். இதனால் நாய்களை யாரும் பிடிப்பதில்லை.

அசுர வேகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை ஆங்காங்கே கொட்டப்படும் இறைச்சி கழிவை ருசி பார்த்து, வெறி பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. வெறி பிடித்த நாய்களையும், யாரும் எதுவும் செய்ய முடிவதில்லை.

இதுவே தற்போது நடந்த சம்பவத்திற்கு காரணமாகும். இனி வரும் நாட்களிலாவது மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாகும்.