காமராஜர் விருதுக்கு தேர்வான பள்ளிகள்

0
8

பொள்ளாச்சி : தமிழகத்தில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

பள்ளிகளின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், வகுப்பறை வசதி, மாணவர் சேர்க்கை, குடிநீர் வசதி மற்றும் மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கண்டறியப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வாகும் தொடக்க பள்ளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 75 ஆயிரம் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளி, மசக்காளிபாளையம் நடுநிலைப்பள்ளி, நெகமம் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட நான்கு அரசு பள்ளிகள், காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் காமராஜர் விருதுக்கு, நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரம், பள்ளியின் கட்டமைப்பு பணிகள், வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் அடிப்படையில், காமராஜர் விருது வழங்கி அதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் கூடுதலாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது,’ என்றனர்.