ஆச்சிபட்டியை நகராட்சியுடன் இணைக்காதீங்க! சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு

0
8

பொள்ளாச்சி : ஆச்சிப்பட்டி மற்றும் சங்கம்பாளையம் கிராமத்தை, நகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என, மா.கம்யூ., கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி, சப்-கலெக்டர் அலுவலகத்தில், மா.கம்யூ., ஆச்சிப்பட்டி கிளை சார்பில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

அதிக மக்கள்தொகை மற்றும் பரப்பு கொண்ட ஊராட்சியாக ஆச்சிப்பட்டி உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து பல கிலோமீட்டர் அப்பால் பல கிராமங்களும் உள்ளன. இங்கு, விவசாயம் சார்ந்த தொழில்களில் எழை, எளிய மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சியுடன் ஆச்சிப்பட்டி மற்றும் சங்கம்பாளையம் பகுதிகளை இணைத்தால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த கிராமங்களை விடுவித்து, ஏனைய ஆச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளை நகராட்சியோடு இணைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தே.மு.தி.க., நகர செயலாளர் கணேசன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெண்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.

மனமகிழ் மன்றம், சமூக நல சங்கம் என்ற பெயரில் நடத்தப்படும் தனியார் மதுபார்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். பெட்டிக்கடைகளில் போதை வஸ்துகள் விற்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.