கோவை ஆவாரம்பாளையத்தில், பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றவர் கைது

0
116
கோவை,
கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 29). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சி.என்.சி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் வாடகைக்கு வசித்து வரும் வீட்டில் பொதுக்கழிப்பிடம்தான் இருக்கிறது. செல்வகணேசிடம் அதிநவீன கேமரா இருக்கும் செல்போன் உள்ளது.
இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ஒரு பெண் குளிப்பதற்காக குளியலறை சென்றார். அதை கண்காணித்த செல்வகணேஷ் அந்த பெண்ணுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்று, அவர் குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுக்க முயற்சி செய்தார்.
அதை பார்த்ததும் அந்த பெண் அலறியதுடன், அவரை கடுமையாக எச்சரித்தார். அதற்கு செல்வகணேஷ், நீ குளிப்பதை எனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து உள்ளேன். வெளியே கூறினால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியதுடன், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகணேசை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.