வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலம்; ராமர் கோவிலில் விரிவான ஏற்பாடு

0
11

கோவை; ராம்நகர் கோதண்டராம ஸ்வாமி (ராமர் கோவிலில்) தேவஸ்தானத்தில் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவ விழா கோலாகலமாக இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் கடந்த சில தினங்களாக செய்து வருகிறது.

இது குறித்து மூத்த வக்கீலும், ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான தலைவருமான நாகசுப்ர மணியம் கூறியதாவது:

கோவை ராம்நகரிலுள்ள கோதண்டராம ஸ்வாமி தேவஸ்தானத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவ விழா கோலாகலமாக நடக்கிறது.

இன்று அதிகாலை 4:30 மணியிலிருந்து 5:00 மணிக்குள் சுவாமிக்கு திருமஞ்சனம் நிறைவேற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டு பரமபத வாசலை கடக்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து சுவாமி ராமர் கோவில் பிரவசன மண்டபத்தில் எழுந்தருளுவிக்கப்படுகிறார். அங்கிருந்து 6:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா புறப்படுகிறார். ராமர் கோவில் சாலை, காளிங்கராயன், சென்குப்தா, ராஜாஜி, சத்தியமூர்த்தி சாலைகளின் வழியாக மீண்டும் ராமர் கோவிலை அடைகிறார்.

கோவிலில் சொர்க்க வாசலை கடந்து வரும் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் சேஷவாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி ராமர் கோவிலிலுள்ள ராமர் சன்னிதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் சன்னிதிக்கு முன்பகுதி வெள்ளியால் செய்யப்பட்டுள்ள பிரபாவளியை துாய்மைப்படுத்தி பாலீஷ் செய்யும் பணிகள் நடந்தது. கோவில் முழுக்க பணியாளர்களை கொண்டு துாய்மைப்படுத்தப்பட்டு, சொர்க்கவாசலை கடந்து

செல்லும் பகுதிக்கும், ராஜகோபுரத்தின் முன் பகுதியிலும் பந்தல் அமைத்து மாவிலை, பாக்கு, வாழை தோரணங்கள் கட்டப்பட்டன.

கோவிலிலிருந்து சுவாமி புறப்பட்டு திருவீதி உலா செல்லும் போது ராம்நகர் பஜனை கோஷ்டியினரும், வேதபண்டிதர்களின் வேதகோஷங்களும் முழங்கும். நிறைவாக மார்கழியில் திருப்பாவை பாராயணம் செய்தவர்கள், உஞ்சவிருத்தி மற்றும் நாமசங்கீர்த்தனத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் மரியாதை செய்து கவுரவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு நாகசுப்ரமணியம் கூறினார். உடன் ,செயலாளர் விஸ்வநாதன் உடனிருந்தார்.

ஒன்பது மாதங்களாக தொடரும் அன்னதானம்

ராமர் கோவில் சார்பில் ஞாயிறு தவிர மற்ற அனைத்து வார நாட்களிலும் பகல் 12:00 மணிக்கு மஹா அன்னதானம் கோவிலுக்கு அருகே உள்ள அசோகாபிரேமா திருமண மண்டபத்தில் நடக்கிறது. தொடர்ந்து 9 வது மாதமாக அன்னதானம் தொடர்கிறது நாளொன்றுக்கு, 300 முதல் 500 பேர் வரை பங்கேற்கின்றனர்.இதற்கு நாளொன்றுக்கு ஆகும் 10,000 ரூபாய் செலவை பக்தர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த ஆண்டு முழுவதுக்கும் அன்னதானம் செய்ய பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கோவில் செயலாளர் விஸ்வநாதனை 94433 44981 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.