கோவை: கோவை, தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் தனபதி, 47; தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவரின் ‘வாட்ஸ் அப்’ எண்ணை, ‘கேடலிஸ்ட் மார்க்கெட் லிமிடெட்’ என்ற ‘வாட்ஸ் அப்’ குழுவில் இணைத்துள்ளனர்.
அந்த குழுவில் இருந்த உறுப்பினர்கள், ‘கேடலிஸ்ட் மார்க்கெட் லிமிடெட்’ நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் கிடைத்தது போல், குழுவில் பகிர்ந்துள்ளனர். இது தனபதிக்கு முதலீடு செய்ய ஆசையை துாண்டியுள்ளது.
அக்குழுவை சேர்ந்த ஒருவர் தனபதியை தொடர்பு கொண்டு, தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என கூறியுள்ளார்.
அந்த நபர் ‘கேடலிஸ்ட் மார்க்கெட் லிமிடெட்’ என்ற பெயரில், போலியாக ஒரு செயலியை தனபதிக்கு அனுப்பியுள்ளார். அதை தனபதி பதிவிறக்கம் செய்தார். அந்த செயலி வழியாக, டிச., 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை, 13 தவணைகளில் சுமார் ரூ. 31 லட்சம் முதலீடு செய்தார்.
அவர் முதலீடு செய்த பணத்திற்கு, ரூ.23 லட்சம் லாபம் கிடைத்தது போலும், கணக்கில் மொத்தம் ரூ.54 லட்சம் இருப்பது போலும் காண்பித்துள்ளது. ஒரு கட்டத்தில், இந்த பணத்தை தனபதி எடுக்க முயற்சித்தார்.
ஆனால் எடுக்க முடியவில்லை. இது குறித்து, ‘கேடலிஸ்ட் மார்க்கெட் லிமிடெட்’ வாட்ஸ் அப் குழுவில் கேட்டுள்ளார். யாரும் பதிலளிக்கவில்லை. குழு தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயன் இல்லை. தனபதி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.