விளாமரத்தூர் -பில்லூர் அணை இடையே தார் சாலை

0
11

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே விளாமரத்தூர்-பில்லூர் அணை இடையே தார் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீரை தேக்கி வைக்க காமராஜர் ஆட்சி காலத்தின் போது பில்லூர் அணை கட்டப்பட்டது. அப்போது, 60 ஆண்டுகளுக்கு முன் விளாமரத்தூர் பில்லூர் அணை பகுதிக்கு இடையே, தற்காலிகமாக வனப்பகுதியில் கற்களால் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின் இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே பில்லூர் அணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காக சுமார் 61 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து வனப்பத்திகாளியம்மன் கோவில் வழியாக நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமரத்தூர் பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு சுமார் எட்டரை கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை மேம்படுத்தி தார் சாலை அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக விளாமரத்தூர் பகுதியில் இருந்து பில்லூர் அணை செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம், சுரங்க மற்றும் கனிமவளத்துறை சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டு, தார் சாலை அமைப்பதற்கான முதல் கட்டப்பணி துவங்கப்பட்டது. இதற்கான பணியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவங்கி வைத்தார். தார்சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளதால், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.