பெ.நா.பாளையம்; கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட மூன்று அடுக்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அவர்களிடம் இருந்த அதிகாரங்கள், தனி அலுவலர்களிடம் உடனடியாக ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சியில், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் பதவிக்காலம் கடந்த, 5ம் தேதி முடிவடைந்தது.
இந்த மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்கும் வரை மூன்று அடுக்கு ஊராட்சிகளின் நிர்வாகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற உரிய அறிவுரைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
தனி அலுவலர்கள்
இதன்படி, மாவட்ட ஊராட்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் கூடுதல் இயக்குனர், கூடுதல் ஆட்சியர், (வளர்ச்சி), இணை இயக்குனர், திட்ட இயக்குனர் ஆகியோர் தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கிராம ஊராட்சிக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ., கிராம ஊராட்சிகள்) தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
மேற்கண்ட அலுவலர்கள் அவர்களது தற்போதைய பதவி சார்ந்த பொறுப்புகளுடன், கூடுதலாக இப்பொறுப்பையும் மேற்கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சிகளை பொறுத்த அளவில், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர், (பி.டி.ஓ., கிராம ஊராட்சி) கிராம ஊராட்சியில் உள்ள தீர்மான புத்தகம், பிற பதிவேடுகள், ரொக்க புத்தகங்கள், பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத காசோலை புத்தகங்கள்,வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பில் எடுத்துக் கொண்டதற்கான அறிக்கையினை இம்மாதம், 8ம் தேதி காலை, 10:00 மணிக்குள் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்த நாளான இம்மாதம், 5ம் தேதியில் காசாக்கப்படாமல் நிலுவையில் உள்ள காசோலைகளை கணக்கிட்டு, அந்த காசோலைகளை வங்கியில் அனுமதிக்கும் போது, பி.டி.ஓ.,வின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்ற விபரத்தினை வங்கி மேலாளர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் வாயிலாக உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
முறைகேட்டுக்கு முற்றுபுள்ளி
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘இதுவரை தலைவர் மற்றும் துணைத் தலைவராக இருந்தவர்களின் பொறுப்புகள் அப்படியே பி.டி.ஓ., மற்றும் மண்டல பி.டி.ஓ.,களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அவசர, அவசிய நிதி ஒதுக்கீடு செய்யும் போது அதற்கான ஓ.டி.பி.,கள் (ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு), பி.டி.ஓ., மண்டல பி.டி.ஓ., அந்தந்த ஊராட்சி செயலாளர்களுக்கு பகிரப்படுகிறது.
இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய சூழ்நிலையில், இன்ஜினியரிங் துறையில் அதற்கான உரிய அனுமதி பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள முடியும்.
அனைத்து நிதி பரிமாற்றங்களும், ‘ஆன்லைன்’ வாயிலாகவே நடத்த முடியும். ஊராட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்படுகிறது.
இதனால் போலி பில் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்களுக்கான பொறுப்பு மற்றும் கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன’ என்றனர்.