கோவை; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது குறித்து, இந்தாண்டு அறிவிப்பு எதுவும் வரவில்லை. பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது குறித்து, கோவை பெண்கள் சிலரிடம் பேசினோம்.
அல்லுசு, காந்திபுரம்: பொங்கலுக்கு கடந்தாண்டு கொடுத்த பணத்தை இந்தாண்டும் கொடுக்க வேண்டும். 1,000 ரூபாய் கொடுப்பதால், அரசுக்கு பெரிய நஷ்டமாக போவதில்லை.
பானு, கிராஸ்கட் ரோடு காந்திபுரம்: எது எதற்கோ கோடிக் கணக்கில் அரசு பணத்தை செலவு செய்கிறார்கள். ஜனங்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது. அவசியம் கொடுக்க வேண்டும்.
விமலா, கோவை: நாம் யாரும் பொங்கலுக்கு பணம் கேட்கவில்லை. அவர்கள்தான் கொடுத்தார்கள். இப்போது இல்லை என்று சொல்கிறார்கள். நாம் என்ன செய்ய முடியும். கொடுத்தால் சந்தோஷப்படுவோம்.
பூங்கொடி, பூமார்க்கெட்: இந்த 1,000 ரூபாயை வசதி இல்லாத ஜனங்களுக்குதான் கொடுக்கிறார்கள். கிடைத்தால் சந்தோஷப்படுவோம்.
கவுரி, வேலந்தாவளம்: பொங்கலுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இருக்கிறோம். இப்போது இல்லை என்று சொன்னால் எப்படி. வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொடுக்கிறார்கள். இதில் என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது. கட்டாயம் கொடுக்க வேண்டும்.
சூரியா, கோவில்மேடு: கொரோனா வந்தபோது, பொங்கலுக்கு 2,000 ரூபாய் கொடுத்தார்கள். இப்போது 1,000 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். ஏழை ஜனங்களுக்கு கொடுப்பதை நிறுத்தி விடக்கூடாது.
பழனியம்மாள், சாயிபாபாகாலனி: பண்டிகைக்கு கொடுக்கிற பணத்தை இல்லை என்று சொல்லுவது தவறு. 1,000 ரூபாய் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
சுமதி, பூமார்க்கெட்: 1,000 ரூபாய் தானே கொடுக்கிறார்கள்; 5,000 ரூபாயா கொடுக்கப் போகிறார்கள். ஓட்டுப்போட்ட மக்களை ஏமாற்றினால், அப்புறம் ஒட்டு போடாமல் ஏமாற்றி விடுவார்கள்.