பள்ளி வாகனம் கவிழ்ந்தது; 32 குழந்தைகள் தப்பினர்

0
10

பெ.நா.பாளையம்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலை, பெரியநாயக்கன்பாளையம், கோட்டை பிரிவு அருகே, சாய் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான வேன் நேற்று காலை 8:40 மணிக்கு நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து 32 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கோட்டை பிரிவு நோக்கி சென்றது.

வாகனத்தை பிரஸ் காலனி அஜய், 26, ஓட்டினார். மேட்டுப்பாளையம் சாலை, வீரபாண்டி பிரிவு அருகே வந்தபோது, அஜய்க்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. நிலை தடுமாறிய வேன், சாலையோரமாக இருந்த மினி வேன் மீது மோதி, சாலையின் வலது புறமாக கவிழ்ந்தது.

அப்பகுதியில் இருந்தவர்கள், வேன் கதவை திறந்து குழந்தைகளை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பெரும்பாலான குழந்தைகள் எவ்வித காயமும் இல்லாமல் தப்பினர். மாணவி ஒருவருக்கு கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தைகள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.