ஒரு நஞ்சுக்கொடியின் ஓலம்

0
126

நெய்தல்
…………….

ஆழ்கடலில் புதைத்த நஞ்சுக்கொடி
மீளவும் வருகிறது கரைக்கு
நனைந்த கால்களைச் சுற்றிக்கொண்டு
அழுகிறது ஆராரோ ஆரிரரோ
உப்பின் ஈரம் படர்ந்தேறும் விழிகளில்
வெடிக்கின்றன பனிக்குடங்கள்.

மருதம்
………….

களையெனப் பிடுங்கப்படுகிறது
முளைவிட்ட நெல்
பச்சைப்பால் ஊறிப்பெருகும் சேற்றில்
மாடுகளை அவிழ்த்து உழுகிறார்கள்.
கொழுஞ்சிவப்பாக மலர்ந்திருக்கும்
நஞ்சுக்கொடி பார்த்து வாந்தி எடுக்கிறாள்
அக்கா இல்லாத தம்பியைப் பெறப்போகும்
நிறைசூலி.

குறிஞ்சி
…………….

சேவல் மட்டுமே கொடியாகப் பறக்கும்
முருகனிடம் உருட்டப்படும் சோழிகளில்
எல்லாமும் மூடியே இருக்கின்றன
இந்த முறை உனக்கு இல்லை என
புதுமண மகளிருக்குக் குறிசொல்ல
சன்னதம் வந்து ஆடுகிறவன் நாவிலிருந்து
நறுமணத்துடன் வருகிறது நஞ்சுக்கொடி

        – இரா.கவியரசு