வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு கோபூஜை செய்து நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு, பால், தயிர், சந்தனம், நெய், தேன், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது.
காலை 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மலைக்கோவிலுக்கு செல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், ஆயிரக்கணக்கானோர், இருசக்கர வாகனங்களில் வந்ததால், மருதமலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மலைமேல் உள்ள கோவிலில் நெரிசலை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் பிரித்து, பிரித்து அனுப்பப்பட்டனர். இதனால், மலைமேல் உள்ள படிக்கட்டு பாதையில், பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து, அதன்பின், வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலிலும் ஏராளமான மக்கள் குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைத்து கோவில்களிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.