ஹெல்மெட் அணிந்ததால் சாலை விபத்துக்களில் 342 பேர் தப்பித்தனர்! 131 பேரால் தப்ப முடியவில்லை

0
12

கோவை: போலீசாருக்காக ெஹல்மெட் அணிவதற்கு பதிலாக, தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அணிய வேண்டும். ஏனென்றால், கடந்த ஆண்டு நடந்த இரு சக்கர வாகன விபத்துக்களில், ெஹல்மெட் அணிந்திருந்ததால், 342 பேர் உயிர் தப்பியுள்ளனர் என்கிறார், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) அசோக் குமார்.

மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துள்ளன.

பள்ளி, கல்லுாரி, அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு செல்வோர், காலை நேரங்களில் பரபரப்பாக செல்கின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிந்து செல்வோர், சிறு காயங்களுடன் உயிர் பிழைக்கின்றனர். 2003ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ல் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. எனினும் சாலை விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை, சற்று குறைந்துள்ளது.

2024 ஜன., 1ம் தேதி முதல் டிச., 18ம் தேதி வரை, மொத்தம் 1,134 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் 525 இருசக்கர வாகனங்கள், விபத்தில் சிக்கியுள்ளன; 131 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில், 31 பேர் ஹெல்மெட் அணியாமல் பயணித்துள்ளனர். மொத்தம் நடந்த 394 விபத்துகளில், ஹெல்மெட் அணிந்து சென்றதால், 342 பேர் உயிரிழப்பில் இருந்து தப்பினர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 52 பேர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். 2023ம் ஆண்டு நடந்த 862 விபத்துகளில், 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர 2024ல் மட்டும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 1,89,243 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிலிருந்து, ரூ. 8 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 215 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) அசோக் குமார் கூறுகையில், ”ஹெல்மெட் அணிந்து வாகனம் இயக்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், வாகன ஓட்டிகள் 100 சதவீதத்தினரும் ஹெல்மெட் அணிந்து செல்வதில்லை. நாம் சரியாகதான் செல்கின்றோம்; விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என நினைக்கக்கூடாது. எதிரே வருபவர் எப்படி வருவார் என கூற முடியாது.

நமது பாதுகாப்பை, நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். பல விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபரின் தலை அல்லது முகத்தில் மட்டுமே காயம் ஏற்பட்டிருக்கும். ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. போலீசாருக்காக ஹெல்மெட்

அணிவதற்கு பதிலாக, தங்கள் உயிரை காப்பதற்காக அணிய வேண்டும்,” என்றார்.

 

‘ஒன் வே’யில் வருவோர் மீது நடவடிக்கை தேவை

அதிகாலை, நள்ளிரவு வேலைகளில் ‘ஒன் வே’ அல்லது எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். பகல் நேரங்களில் ஒரு வழி பாதையாக இருக்கும் இடங்களில், இரவு நேரங்களில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. உக்கடம்,அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில், கனரக வாகனங்கள் எதிர் திசையில் அதிவேகமாக வருகின்றன. வாகனங்கள் வராது என நினைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள், எதிர் திசையில் பயணித்து உயிரை இழக்கின்றனர். அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் எதிர்திசையில், ‘ஒன் வே’யில் செல்லும் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.