மாநகராட்சி! மார்க்கெட்டுகளை மாற்ற தீர்மானம் நிறைவேற்றி விட்டு… ஆலோசனைக்கு காய்கறி, பழ வியாபாரிகளுக்கு அழைப்பு

0
12

கோவை; கோவையில் உள்ள மொத்த காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளை, வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு மாற்றுவது தொடர்பாக, வியாபாரிகளுடன் ஆலோசிக்க, மாநகராட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இவ்விஷயத்தில், அவசரப்பட்டு, தெளிவில்லாமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக, காய்கறி வியாபாரிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

கோவை மாநகராட்சி சார்பில், வெள்ளலுாரில், 61.62 ஏக்கரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது; 52.46 கோடி ரூபாய் செலவு செய்யப்படடு இருக்கிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், எவ்வித காரணமும் கூறாமல், அப்பணி முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்விடத்தின் பயன்பாட்டை, மொத்த காய்கறி, பழ மார்க்கெட் மற்றும் லாரிப்பேட்டையாக மாற்ற, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து பிரச்னை ஏற்படும் என்பதால், லாரிப்பேட்டையை மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மாமன்ற ஆளுங்கட்சி கவுன்சில் குழு தலைவர் கார்த்திகேயன்

வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுப்புறச்சூழல் மோசம்

பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு அருகே, குப்பை கிடங்கு இருக்கிறது; மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை கொட்டப்படுகிறது. அதன் துர்நாற்றத்தால் சுற்றுவட்டார மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்ற வேண்டுமென, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில், வெள்ளலுாரில் திறந்தவெளியில் குப்பை கொட்டக் கூடாதென அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிறுத்தவில்லை.

இச்சூழலில், காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளை அமைத்தால், சுற்றுப்புறச் சூழல் மேலும் பாதிக்கும் என்கிற அச்சம், அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. குப்பை கிடங்கில் இருந்து வரும் ஈக்கள், காய்கறி மற்றும் பழங்களில் அமரும்; அதை உட்கொள்வோர் நோய் தொற்றுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், வியாபாரிகளும் அவ்விடத்துக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

இதையடுத்து, காய்கறி மற்றும் பழ மொத்த வியாபாரிகள், லாரிப்பேட்டை அசோசியேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. காய்கறி மொத்த வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நாளை (3ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடக்கிறது.

மாலை, 3:00 மணிக்கு பழ வியாபாரிகளுடனான கூட்டம் நடக்கிறது. நாளை மறுதினம் (4ம் தேதி) காலை, 11:00 மணிக்கு லாரிப்பேட்டை அசோசியேசஷ் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதையாக, மாமன்றத்தில், அவசரமாக ‘ஆல்-பாஸ்’ முறையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, அதன்பின், வியாபாரிகளை தனித்தனியாக ஆலோசிக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.

‘குப்பை கிடங்கு இருக்கக் கூடாது’ காய்கறி வியாபாரிகள் நிபந்தனை

கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

வெள்ளலுாரில், 27 ஆயிரத்து, 693 சதுரடி பரப்பே ஒதுக்கப்பட்டு இருக்கிறது; இது, ஐந்தரை ஏக்கர் வரும். ஆனால், டி.கே. மார்க்கெட் ஆறு ஏக்கர்; எம்.ஜி.ஆர்., மார்க்கெட் மூன்றரை ஏக்கர்; உக்கடம் மார்க்கெட் இரண்டு ஏக்கர் இருக்கும். இச்சூழலில், டி.கே.மார்க்கெட் பரப்பை விட குறைவாக கொடுத்தால் எப்படியிருக்கும்?

மொத்த வியாபாரத்துக்கு வரும் காய்கறி மூட்டைகளை, இறக்கி வைக்க தேவையான இடம் கற்பனைக்கு எட்டாது. 10 லோடு, 20 லோடு, 25 லோடு இறக்குவோர் இருக்கின்றனர். நான்கு மார்க்கெட்டுகளுக்கு போதுமான இடம் ஒதுக்கவில்லை.

ஒவ்வொரு மார்க்கெட்டிலும், எத்தனை மொத்த காய்கறி கடைகள் செயல்படுகின்றன, ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு பரப்பு இடம் தேவை என அளவிடவில்லை. தெளிவில்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது தீர்மானம்.

அங்கு மார்க்கெட் அமைத்தாலும், கோயம்பேடு மார்க்கெட் போல், விசாலமான வசதிகளுடன் அமைத்து தர வேண்டும். கடைகளை மாற்றுவதற்கு முன், என்னென்ன வசதிகள் வேண்டுமென

ஆலோசிக்க வேண்டும்.

அவ்வாறு கேட்கும்பட்சத்தில், ‘குப்பை இருக்கிறதே; நோய்கள் எங்களுக்கும் வருமே’ என்கிற கேள்வியை முன்வைப்போம். மூன்று மார்க்கெட்டுகள் அமைக்கும் பட்சத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள் என, 1,000 பேர் நிரந்தரமாக இருப்பர்; வீட்டுக்கு நோயுடன் வர முடியாதே.

தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருவர்; அகில இந்திய அளவில் வாகனங்கள் வரும். மார்க்கெட் செயல்படுவதற்கான சவுகரியங்களை செய்து தர வேண்டும்; அதற்காக, அசவுகரியங்களை ஏற்றுக் கொள்வதாக

அர்த்தம் இல்லை.

குப்பைக்கிடங்கை காலி செய்து கொடுத்தால், அங்கு செல்லலாம். குப்பைக்கு நடுவே மார்க்கெட் உருவாக்குவோம் என சொல்லக்கூடாது. மார்க்கெட் அமைப்பதாக இருந்தால், குப்பை கிடங்கை அகற்ற வேண்டும்.

இது தொடர்பாக, விரிவாக ஆலோசிக்காமல், அவசரமாக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குப்பை கிடங்கை அகற்றி விட்டு, இடம் மட்டும் கொடுத்தால் போதும்; நாங்களே கட்டிக் கொள்வோம்.

திட்டத்தை மாற்றியமைக்கலாம். ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே, தெளிவான முடிவு எடுக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகளை அமைத்தால், சுற்றுப்புறச் சூழல் மேலும் பாதிக்கும் என்கிற அச்சம், அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. குப்பை கிடங்கில் இருந்து வரும் ஈக்கள், காய்கறி மற்றும் பழங்களில் அமரும்; அதை உட்கொள்வோர் நோய் தொற்றுக்கு உள்ளாக நேரிடும் என்பதால், வியாபாரிகளும் அவ்விடத்துக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

குப்பையை மறுஅளவீடு செய்வதற்கே

இப்போதுதான் தீர்மானம் நிறைவேற்றம்வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு அருகே, 150 ஏக்கரில் குப்பை கொட்டப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீர் பாழ்பட்டு இருக்கிறது; காற்று மாசடைந்துள்ளது. பழைய குப்பையை, ‘பயோமைனிங்’ முறையில் அழிக்க, அளவீடு செய்வதற்கு தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி, அளவீடு செய்து, அதற்குரிய தொகை இறுதி செய்து, தமிழக அரசிடம் நிர்வாக அனுமதி பெற்று, டெண்டர் கோர வேண்டும். ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் பழைய குப்பையை அழிக்க வேண்டும்.அதே நேரம், 2018க்குப் பின் தற்போது வரை டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது.மாநகராட்சிக்கு அருகே உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், சேகரமாகும் குப்பையை சேர்த்து, இதே பகுதியில் குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் திட்டம், அரசுக்கு முன்மொழியப்பட்டிருக்கிறது. அம்மையம் அமைவதாக இருந்தால், குப்பை கொண்டு வருவதை நிறுத்த வாய்ப்பில்லை.இதன் அருகாமையில், காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டுகள் அமைத்தால், குப்பை ஈ பிரச்னையால், நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதை அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.