இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர் பயிற்சி முகாமில் 140 பேர் பங்கேற்பு

0
13

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கல்லூரியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில், மாணவர்களுக்கான இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர் உண்டு, உறைவிட குளிர்கால பயிற்சி முகாம் நடந்தது.

துவக்க விழாவுக்கு பயனீர் கலை, அறிவியல் கல்லுாரி இணை இயக்குனர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில், 28 மாவட்டங்களில் இருந்து, 140 மாணவர்கள் மற்றும், 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில், வான்வெளி மண்டலத்தை ஆராய்தல், டெலஸ்கோபிக் வாயிலாக உற்று நோக்குதல், அது தொடர்பான கேள்வி, பதில், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

முதல் நாள் நிகழ்ச்சியில் ராக்கெட் என்றால் என்ன, அதன் இயக்கம், செயல்பாடுகள், அதனால் விளையும் நன்மைகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. ஹைட்ரோ ராக்கெட் மாடலை மாணவர்கள் உருவாக்கி, அதை செயல்படுத்தி காட்டினர்.

இரண்டாம் நாள் சூரிய மண்டலத்தை ஆராய்தல் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில் பங்கேற்ற, 28 பள்ளிகளின் மாணவர்களுக்கும் தலா ஒரு டெலஸ்கோப், சூரியனைப் பார்க்கும் கண்ணாடி வழங்கப்பட்டன. இதில், அந்த டெலஸ்கோப்பின் இயக்கம் குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. மேலும், ராட்சத வடிவிலான டெலஸ்கோப் உலகில் எங்கெங்கு உள்ளன. அதனுடைய பயன்பாடுகள் என்ன என்பது குறித்து ‘ஆன்லைன்’ வாயிலாக அப்பகுதியை பார்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மூன்றாம் நாள், கோவை அறிவியல் மையத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கம்

தரப்பட்டன.

நான்காம் நாள் வான்வெளி விஞ்ஞானி பிரபாகர், வான்வெளி அறிவியல் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், டெலஸ்கோப்பின் வகைகள், அடிப்படை பண்புகள், டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட வான்வெளி அறிவியல் மாற்றங்கள் குறித்து விளக்கினார்.

பயிற்சி முகாமில், ஸ்பேஸ் இந்தியா நிறுவன தென் மாநிலங்களுக்கான தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல், மகேந்திரன், ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.