ஆக்கிரமிப்பு அகற்ற கிராம மக்கள் கோரிக்கை

0
14

அன்னுார் : பொகலுார் ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சார்பில், அன்னுார் தாலுகா அலுவலகம் மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தரப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :

பொகலுார் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் செல்லும் சாலையில், சாலையூர் இணைப்பு சாலை அருகே நிலவியல் பாதை உள்ளது. இந்தப் பாதை வழியாக 80 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மற்றும் பால் வாகனங்கள், விவசாய வாகனங்கள் செல்கின்றன.

குளத்துப்பாளையம், ஒட்டு குஞ்சாம்பாளையம், ஏ.டி., காலனி, அட்டவணை செம்சம்பட்டி, முகாசெம் பட்டி, தாத்தம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி சிலர் முள்வேலி அமைத்து சாலையை மறித்து விட்டனர். உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, மீண்டும் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, துணை தாசில்தார், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு பார்வையிட்டனர். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி தலைவர் நடராஜன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதாவிடம் உறுதி அளித்தனர்.

இது குறித்து குளத்துப்பாளையம் மக்கள் கூறுகையில், ‘வருகிற 5ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால், வரும் 6ம் தேதி பொகலுாரில் சாலை மறியல் செய்ய திட்டமிட்டுள்ளோம்,’ என்றனர்.