மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில், பணி பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
காரமடை வட்டார சுகாதாரத்துறையின் வாயிலாக காய்ச்சல் பாதிப்பு உள்ள இடங்களில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் காய்ச்சல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து காரமடை வட்டார சுகாதாரத்துறையினர் கூறுகையில், ”காரமடை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சளி, காய்ச்சல் தொடர்பாக அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
தண்ணீரை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். அதிக பணி இருக்கும் சமயத்தில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிவது அவசியம். தும்மல், இருமல் இருப்போர் முககவசம் அணிந்து பிறருக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும்,” என்றனர்.