கோவை தொழில் துறையினருக்கு நல்லதே நடக்கும்! புத்தாண்டில் வளர்ச்சி காத்திருக்கு!

0
12

கோவை: உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஜம்மென்று முன்னேறி வருகிறது கோவை. அரசின் ஒத்துழைப்பும் இருந்தால், இந்த புத்தாண்டில் இன்னும் பல உயரங்களை தொட முடியும் என்கின்றனர் தொழில்துறையினர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, தொழில் வளம் நிறைந்த நகரமாக கோவை திகழ்கிறது. தென் மாநிலங்களின் மான்செஸ்டர் என்று ஜவுளித்துறையின் புகழின் உச்சத்துக்கு சென்ற கோவை, இன்று போர்ஜிங்ஸ், காஸ்டிங், இன்ஜினியரிங், பம்ப், கிரைண்டர், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், உயர்கல்வி, மருத்துவம், கட்டுமானம் துறைகளிலும், கொடிகட்டி பறக்கிறது.

அதற்கேற்ப, கோவை நகரில் ஏழு மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டிலுள்ளது. இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இனியும் இரண்டு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

விமானநிலைய விரிவாக்கம்

விமானநிலைய விரிவாக்கப்பணிகளுக்கான நிலம், கையகப்படுத்தி ஒப்படைக்கும் பணிகள், 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் விரிவாக்கப்பணிகள் துவங்கும். மேற்குப்புறவழிச்சாலைப்பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கோவை – தடாகம், மருதமலை, சிறுவாணி, பாலக்காடு பொள்ளாச்சி சாலை விரிவாக்கம் செய்து செப்பனிடப்பட்டுள்ளது. இப்படி நகருக்கான உட்கட்டமைப்பு வசதிகள், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன.

அதனால் ரியல் எஸ்டேட் தொழிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மாநகராட்சியின், 24 மணி நேர குடிநீர் திட்டமும், நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது.

பட்ஜெட்டில் சலுகைகள்

அதே சமயம் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், மேலும் இரு புறவழிச்சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தினால் மட்டுமே, பன்னாட்டு நிறுவனங்கள் கோவையில் தொழில் துவங்குவதற்கும், வர்த்தரீதியாக வந்து செல்வதற்கும் சவுகரியமாக இருக்கும் என்று, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

மின் கட்டண குறைப்பு, தொழில் துவங்க ஒற்றைச் சாளர அனுமதி, தொழில்பேட்டை, தொழில்கடனுக்கு வட்டிச் சலுகை. இப்படி தொழில் துறையினருக்கு தேவையான சலுகைகளை வரும் பட்ஜெட்டில் உட்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

சிறுதுளி நிர்வாக அறங்காவலரும், தொழிலதிபருமான வனிதாமோகன் கூறுகையில், ”சர்வதேச விமான போக்குவரத்தை, கோவையில் அதிகரிக்க வேண்டும். சர்வதேச விமானங்களை பிடிக்க கொச்சினுக்கும், சென்னைக்கும் செல்ல வேண்டிய மோசமான நிலை நீடிக்கிறது. அதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தால், தொழில் அதீத வளர்ச்சியை எட்டும்,” என்றார்.

கிரடாய் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில், ”ஏராளமான ஐ.டி.,நிறுவனங்கள், கோவையில் அடித்தளமிட்டுள்ளன. அதனால், கோவையில் கட்டட கட்டுமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நல்ல வளர்ச்சி. புத்தாண்டில் கட்டுமானத்துறை இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ”பைக், கார் உள்ளிட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் தயாரிக்கும், மிகப்பெரிய மையமாக கோவை விளங்கப்போகிறது. அதற்கான கட்டமைப்புப்பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏராளமான ஐ.டி.,நிறுவனங்களும் கால் பதித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறையின் உச்சமாக கோவை திகழப்போகிறது. பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கப்போகிறது,” என்றார்.

இதைத்தானே கோவை எதிர்பார்க்கிறது. அரசு மனது வைத்தால், இந்த புத்தாண்டில் அனைத்தும் சாத்தியமாகும்!