நீங்களும் லட்சாதிபதி! 6 ஆயிரம் செலுத்தினா. ஆசை வார்த்தை கூறி ஆள் சேர்த்தது அம்பலம்

0
12

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ‘ஜி.பி.ஓய்.,’ஆப்பில், இணைய திருமண மண்டபங்களில் கூட்டம் நடத்தி, ஆட்களை சேர்த்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொள்ளாச்சியில், ‘ஜி.பி.ஓய்.,’ மொபைல் ஆப் வாயிலாக பணம் கட்டி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அதிக ஆட்களை சேர்த்து பணம் சம்பாதித்த எட்டு பேர் மீது, ஒழுங்குப்படுத்தாத டெபாசிட் வைப்பு திட்ட தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்தவர்கள் மற்றும் பணம் இழந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:

ஜி.பி.ஓய்., ஆன்லைன் டிரேடிங் வாயிலாக பணம் சம்பாதிப்பது குறித்து கடந்த மாதம், பொள்ளாச்சியில் உள்ள ேஹாட்டலில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மொபைல்ஆப் வாயிலாக முகவர்கள் போன்று செயல்பட்ட சிலர், ஆறாயிரம் ரூபாய் செலுத்தினால், தினமும் மொபைலில் இரவு நேரத்தில் நடக்கும் ‘ஆன்லைன் டிரேடிங்’கில், ஆப்சனை கிளிக் செய்தால், 300 ரூபாய் கிடைக்கும்.

இதில், சேருவோர், தங்களுக்கு கீழே ஆட்களை சேர்த்து விட்டால், தினமும், மூவாயிரம் முதல், எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மேலும், முகவர்கள் போன்று பேசிய நபர்கள், தங்களுக்கு கீழே, 80 பேர் வரை சேர்த்து பணம் பெறுவதாகவும் தெரிவித்தனர். ஆட்களை சேர்த்து பணம் செலுத்தினால், 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை திரும்ப பெறலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும், இந்த மொபைல் ஆப் எவ்வாறு செயல்முறைப்படுத்துவது என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உறுப்பினர்கள் உள்ளதாக, கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆட்களை அதிகளவு சேர்த்தால் தங்க காசு, பேன், மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி பலரும் பணத்தை செலுத்தியுள்ளனர். சில நாட்களாக ஆப் சரி வர வேலை செய்யவில்லை; ஆப்பில், கே.ஓய்.சி., அப்டேட் செய்யவும், பணம் செலுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பணம் செலுத்தியவர்கள், செயலியில் இணைத்தவர்களை சந்தித்து கேட்க துவங்கினர். மேலும், ஆரம்ப காலத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அதிக ஊக்கத்தொகை கிடைத்த நிலையில், இறுதியாக சேர்வோருக்கு ஊக்கத்தொகை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. இதில், பொள்ளாச்சியில் மட்டும், 30 ஆயிரம் பேருக்கு மேல், குறைந்தபட்சமாக ஆறாயிரம் ரூபாய் செலுத்தி, ஏமாந்துள்ளனர்.

இவ்வாறு, தெரிவித்தனர்.