நெகமம்; நெகமம், மெட்டுவாவியில் ‘சிப்காட்’ தொழில் பூங்கா அமைவதை தடுக்க வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
மெட்டுவாவி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் சிலர் கோவையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்து, மெட்டுவாவி பகுதியில் அமையவிருக்கும் ‘சிப்காட்’ தொழில் பூங்காவுக்கு எதிராக மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
‘சிப்காட்’ தொழில் பூங்கா அமைய இருக்கும் பகுதியைச் சுற்றி, 10 ஊராட்சிகள் உள்ளது. இதில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
இப்பகுதியில் இருந்து பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, தக்காளி சாகுபடி, பந்தல் காய்கறிகள், கீரை வகை மற்றும் செடி வகை காய்கள், கோழிப்பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு, காற்றாலை வாயிலாக மின்சாரம் தயாரித்தல், மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல், தென்னை விவசாயம் என பல தொழில் உள்ளது.
இப்பகுதி, பாலக்காட்டு கணவாய் பகுதியாக இருப்பதால் ஆண்டு முழுதும் குளிர்ந்த காற்று மற்றும் மழை பெய்வதால், இப்பகுதியில் மூன்று போகமும் விளைச்சல் எடுக்க முடியும்.
மேலும், இப்பகுதியில் மண்வளமும் நன்றாக உள்ளது. இப்படி இருக்க, இங்கு ‘சிப்காட்’ தொழில் பூங்கா அமைந்தால், நச்சுப் புகை கலந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு காற்று மாசு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், நோய் தாக்குதல் ஏற்படும். ‘சிப்காட்’ தொழில் பூங்காவில் இருந்து வெளிவரும் கழிவு பி.ஏ.பி., கால்வாயில் கலந்தால், சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமும், கால்நடைகளும் அழித்துவிடும். நிலத்தடி நீர் மாசுபட அதிக வாய்ப்புள்ளது.
நேரங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ‘ட்ரோன்’ வாயிலாக நில அளவீடு செய்துள்ளனர்.
இங்கு தொழிற்சாலை அமைவது குறித்து, அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கோவை கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர்களிடம் தெரிவித்தோம். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பகுதியில் ‘சிப்காட்’ தொழில் பூங்கா வரவில்லை என்ற தகவலை கூறினார். கலெக்டரிடம் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்ததால் பொதுமக்களிடையே மேலும் குழப்பமும், அச்சமும் அதிகரித்துள்ளது.
இப்பகுதியில், ‘சிப்காட்’ தொழில் பூங்கா அமைய ஊராட்சி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் இப்பிரச்னையை நிர்வாக ரீதியாக தீர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.