கோவை; வானிலையைக் கணிக்க, உலகளாவிய தரவுகளையே பயன்படுத்துகிறோம். சென்னையிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என, சென்னை வானிலை ஆராய்ச்சி மைய புயல் எச்சரிக்கை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
வானிலை முன்னறிவிப்புகள் விவசாயிகளுக்கு பயனளிக்கும். குறுகிய கால வானிலை அறிக்கையை வைத்து, வடிகால் ஏற்பாடு செய்வதோ, மூடாக்கு போடுவதோ செய்யலாம்.
நீண்ட கால கணிப்பை வைத்து, உதாரணமாக, நடப்பாண்டு அவ்வளவாக மழை இருக்காது என தெரியவந்தால், அதிகம் நீர் தேவைப்படும் பயிர்களை, சாகுபடி செய்வதைத் தவிர்த்து விடலாம்.
தானியங்கி வானிலை ஆய்வு மையங்கள், பெரிய அளவில் பலனளிக்காது. அந்தப் பகுதியின் வெப்பநிலை, எவ்வளவு மழை என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.
தரவுகளை கம்ப்யூட்டரில் உள்ளிட்டு, அதனைக் கணித்தே, வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்புகளை வெளியிடுகிறது. பொதுவாக 5 நாட்களுக்கான வானிலைதான் ஓரளவு துல்லியமானது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தை நவீனமாக, ‘அப்டேட்’ செய்ய வேண்டுமா எனப் பலரும் கேட்கின்றனர். தற்போதே உலகளாவிய தரவுகளை வைத்துத்தான் சென்னையிலும் கணித்து வருகின்றனர்.
எனவே, அப்டேட் என்பது உலகளாவியதாக இருக்க வேண்டும். சென்னைக்கு என்று தனியாக எதுவும் தேவையில்லை. உலக நாடுகளின் தரவுகளைத்தான் நாம் ஆய்ந்து கணிப்புகளை வெளியிடுகிறோம்.
மழையைக் கண்டு அஞ்சக்கூடாது. மழை இல்லாவிட்டால் உலகே இல்லை. நீர்வழிப்பாதைகளை, நீர் நிலைகளை சரியாக பராமரித்தால் போதும்.
மாணவர்களைச் சந்திக்கும்போது, இந்தத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமா எனக் கேட்கின்றனர். அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூற முடியாது. ஆய்வு செய்து, வெளிநாடுகளுக்குச் செல்லலாம். பல்கலைக்கழகங்களில் துறைகள் உள்ளன. அங்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.