அன்னூர் அருகே, கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

0
103
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே 100 ஆண்டு பழமையான மூக்கனூர் அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. எனவே கோவிலில் இருந்த ஸ்ரீதேவி, பூதேவி, அரங்கநாதர், ஆண்டாள், கருடாழ்வார் ஆகிய 5 ஐம்பொன் சிலைகளை அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.
கோவிலுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஊருக்கு அருகில் உள்ள சண்முகா நகரில் 11 சென்ட் இடம் வாங்கப்பட்டது. அதில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. அதில் ஐம்பொன்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற விஷேச நாட்களில் வழிபாடு நடப்பது வழக்கம்.
கடந்த மாதம் 29-ந் தேதி பூசாரி பூஜையை முடித்து விட்டு, கோவிலை பூட்டி சாவியை கோவில் நிர்வாகி செல்வராஜிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை அமாவாசையை முன்னிட்டு செல்வராஜ் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உள்ளே சென்றார். அப்போது கோவிலின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, கோவிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.