அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக்-2024; அதிரடி காட்டிய சிறுவர்கள்; ‘மிரண்ட’ பார்வையாளர்கள்

0
14

‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நேற்று துவங்கிய, ‘அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக்’ போட்டியில் சிறுவர்களின் அபாரமான ஆட்டம், எதிரணியினரை திணறடித்தது.

‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நேற்று துவங்கிய, ‘அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக்’ போட்டியில் சிறுவர்களின் அபாரமான ஆட்டம், எதிரணியினரை திணறடித்தது.

தற்போது, ஜூனியர் வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் நேஷனல் மாடல் குழும பள்ளிகள் சார்பில், ‘அபார்ட்மென்ட் ஜூனியர் கிரிக்கெட் லீக்-2024’ போட்டி, சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது. இவர்களுடன், திருப்பூர் டிராபீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் மற்றும் ‘ஓகே’ ஸ்வீட்ஸ் ஆகியன கரம் கோர்த்துள்ளன.

ஆரம்பமே அசத்தல்

டென்னிஸ் பந்து கொண்டு, 10 ஓவர் நடக்கும் போட்டியில் சிறுவர்கள் அதிரடி காண்பித்து வருகின்றனர்.

நேற்று ‘ஏ’ மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், பேட்டிங் செய்த ஜெயின்ஸ் அன்டாரா அணியினர், 10 ஓவர்களில், 8 விக்கெட்டுக்கு, 78 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து, மான்செஸ்டர்ஸ் சிட்டாரா(பீளமேடு) அணி, 7.2 ஓவரில், 8 விக்கெட் வித்தியாசத்தில், 79 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 37 ரன்கள் எடுத்த சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அடுத்து, காசா கிராண்ட் காஸ்மோஸ் அணியும், ஆர்.ஆர்., சாய் அபினவ் அணியும் மோதின.

பேட்டிங் செய்த காசாகிராண்ட் அணி, 10 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 63 ரன்கள் எடுத்தது. ஆர்.ஆர்., சாய் அபினவ் அணி, 8.2 ஓவரில், 8 விக்கெட் வித்தியாசத்தில், 66 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 19 ரன்கள் எடுத்ததுடன், 3 விக்கெட் வீழ்த்திய வீரர் உதய்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

‘பி’ மைதானத்தில் அபாரம்!

ஜெயின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா(ஹோப்ஸ் 11) மற்றும் சவுபர்ணிகா ஸ்பாண்டன் அணிகள் இடையேயான முதல் போட்டியை, பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேசன்ஸ் தலைவர் கண்ணன் துவக்கிவைத்தார். முதலில் பேட்டிங் செய்த சவுபர்ணிகா ஸ்பாண்டன் அணி, 10 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 74 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய, ஹோப்ஸ் 11 அணி, 6.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 77 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 35 ரன்கள் எடுத்த வீரர் மபாசி அகமதுவுக்கு, சி.ஐ.டி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் ஆட்டநாயகன் விருது வழங்கினார்.

இரண்டாவது ஆட்டத்தில், முதல் பேட்டிங் செய்த ஆர்.ஆர்., துர்யா அணி, 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 96 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராதா அபார்ட்மென்ட் அணி, 10 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 55 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில், 39 ரன்கள் எடுத்த ஆர்.ஆர்., துர்யா வீரர் சஞ்சய்க்கு, பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேசன்ஸ் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார். இன்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடக்கின்றன.

பரிசுகள் இதோ!

வெற்றிபெறும் அணி வீரர்கள் அனைவருக்கும் கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணி வீரர்களுக்கு பேட்டிங் கிளவுஸ் பரிசாக வழங்கப்படுகிறது.