தேயுது தெற்கு! குப்பை கொட்டும் இடமா வெள்ளலுார்? ‘மெட்ரோ ரயில் ‘ ரூட்டில் புறக்கணிப்பு…

0
14

கோவை : கோவை ‘மெட்ரோ ரயில்’ திட்ட வழித்தடத்தில், தெற்குப்பகுதி புறக்கணிக்கப்பட்டு இருப்பதால், வெள்ளலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.

கோவையில் அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு என, இரு வழித்தடங்களில் ‘மெட்ரோ ரயில்’ இயக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டம் தொடர்பாக நிலவியல் ஆய்வு செய்தபோது, உக்கடம் பஸ் ஸ்டாண்டில், ‘மெட்ரோ ஜங்சன்’ அமைத்து, கரும்புக்கடை, குறிச்சி பிரிவு, திருவள்ளுவர் நகர், போத்தனுார் சந்திப்பு, ரயில் கல்யாண மண்டபம், மேட்டூர் வழியாக வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் வகையில் வழித்தடம் பரிந்துரைக்கப்பட்டது.

அங்கிருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக நீலாம்பூர் ‘டெப்போ’வுக்கு இணைப்பு வழித்தடம் ஏற்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல், போத்தனுாரில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக ராமநாதபுரம் சந்திப்புக்கு வழித்தடம் ஏற்படுத்தி, திருச்சி ரோட்டில் மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

நிலவியல் ஆய்வு செய்தபோது, உக்கடம் – வெள்ளலுார் வரை – 8 கி.மீ., துாரம் இணைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பிய திட்ட அறிக்கையில், இவ்வழித்தடங்களை தற்போது பரிந்துரைக்காததால், தெற்குப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

வளர்ச்சி முடக்கம்

குப்பை கொட்டுவதற்கு மட்டும் வெள்ளலுாரை பயன்படுத்தும் அரசு, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கோ அல்லது ‘மெட்ரோ ரயில்’ இயக்குவதற்கோ முனைப்பு காட்டாமல் வேண்டுமென்றே, தெற்குப்பகுதியை முடக்குவதாக, அப்பகுதி பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர்.

தெற்குப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பணி நிமித்தமாகவும், வர்த்தக ரீதியாகவும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வந்து செல்வோர் ஏராளம். இதேபோல், கேரளாவில் இருந்து கோவைக்கு வருவோரும் அதிகம். இதற்காகவே, கேரள போக்குவரத்து கழகம், அம்மாநில மக்களுக்காக பிரத்யேகமாக பஸ்களை இயக்குகிறது. இவ்விரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

‘வெள்ளலுாரில் குப்பையை கொட்டுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் கட்டவோ, மெட்ரோ இயக்கவோ முன்வருவதில்லை. தெற்குப்பகுதியை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர். இப்பகுதி வளர்ச்சி அடையக்கூடாதென நினைக்கிறார்களா’ என்றனர்.

மூச்சுத்திணறும் மக்கள்

வெள்ளலுாரில் திறந்தவெளியில் குப்பை கொட்டக்கூடாது என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் கூட, கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பையை, வெள்ளலுார் கிடங்கில் தொடர்ந்து கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் நிறுத்தவில்லை. இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசப் பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர். சட்டசபை கூட்டத்தில் பேசியும் கூட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.