கோவை; விற்பனை செய்ய மதுரையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த, மூன்று திருப்பூர் வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் எட்டு கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் இருந்த வாலிபர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமார், 23, மணிகண்டன், 28, ராகுல் பாண்டி, 18 என்பது தெரியவந்தது.
அவர்கள் மதுரையில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, கோவை, திருப்பூரில் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். போலீசார் மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதேபோல், செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செல்வபுரத்தை சேர்ந்த ராஜா, 32, தினேஷ் குமார், 23 ஆகியோரை போலீசார் கைது செய்து,அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா, ரூ. 26 ஆயிரம் பணம், எடை மெஷின் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.