கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு : கடந்தாண்டை ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பு கடந்தாண்டை ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பு

0
16

கோவை; கடந்தாண்டு நவ., மாதத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு கோவை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் போக்குவரத்து, 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய விமான நிலை ஆணையம், நவ., மாதத்துக்கான பயணிகள், சரக்கு போக்குவரத்து தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 18, சரக்கு போக்குவரத்து, 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் சார்பில், அபுதாபி, சிங்கப்பூருக்கு தினசரி விமானங்கள் துவங்கப்பட்ட பின், சர்வதேச பயணிகள் இயக்கத்தில், 42 சதவீதம் மற்றும் கோவையில் இருந்து சர்வதேச சரக்கு கையாளுதல் 107 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில், பெங்களூரு மற்றும் கோவாவுக்கு இண்டிகோ, தினமும் கூடுதல் விமானங்களை இயக்குவதால், கோவை பயணிகள் போக்குவரத்து, 16, சரக்கு போக்குவரத்து மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது.

நவம்பர் மாதத்திற்கான தரவுகளின்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 190 சர்வதேச விமானங்கள், 1,686 உள்நாட்டு விமானங்கள், என, மொத்தம் 1,876 விமானங்கள் இயக்கப்பட்டன. இது, 25 சதவீத வளர்ச்சி.

நவ., மாதத்தில், வெளிநாடுகளுக்கு, 23 ஆயிரத்து, 681, உள்நாட்டுக்குள், 2.42 லட்சம் என, மொத்தம், 2.65 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது, 18 சதவீதம் வளர்ச்சி.

வெளிநாடுகளுக்கு, 156, உள்நாட்டில், 789, என, மொத்தம், 945 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது, 12 சதவீத வளர்ச்சி.

தற்போதுள்ள டெர்மினல் கட்டடத்தை மறுசீரமைப்பது, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, சர்வதேச விமான சேவையை அதிகரிப்பதன் வாயிலாக, பயணிகள் எண்ணிக்கை மட்டுமின்றி, கோவை மண்டலத்தின் பொருளாதாரமும் உயரும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.