பொள்ளாச்சி; ‘மெட்டுவாவியில், ‘சிப்காட்’ தொழிற்பூங்கா வராது என அரசு சட்டசபையில் அறிவிக்க, எதிர்கட்சி தலைவர் தலைமையில் குரல் கொடுப்போம்,’ என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார்.
பொள்ளாச்சி அருகே, மெட்டுவாவி, பனப்பட்டி, மன்றாம்பாளையம், வடசித்துார், பெரியகளந்தை, காட்டம்பட்டி மற்றும் அருகில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள்; சூலுார் தொகுதியில், வாரப்பட்டி, பூராண்டாம்பாளையம், வடவள்ளி, போகம்பட்டி ஆகிய பகுதி களில், 1,500 ஏக்கர் நிலம் அளவீடு செய்து, ‘சிப்காட்’ தொழிற்பூங்கா வருவதாக தகவல் பரவியது.
இத்திட்டம் செயல்படுத்தக்கூடாது என விவசாயிகள்எதிர்ப்பு காட்டினர்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘சிப்காட்’ தொழில் பூங்கா வராது என, விவசாயிகளிடம் உறுதியளித்தார். இது வதந்தி எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மெட்டுவாவி பகுதி விவசாயிகள், திப்பம்பட்டியில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து, இப்பிரச்னை குறித்து கலந்தாலோசித்தனர்.
அதில், விவசாயிகள் பேசுகையில், ‘அமைச்சர், சிப்காட் தொழிற் பூங்கா வருவது வதந்தி என்றும், மாவட்ட கலெக்டர், மறைமுகமாக சிப்காட் அமைப்பதற்கான நிலங்கள் அளவீடு செய்யப்படுவதாக ஒருவருக்கொருவர் மாற்று கருத்துக்களை தெரிவிப்பதால் குழப்பமாக உள்ளது,’ என்றனர்.
எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசுகையில், ”சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தி.மு.க., அரசு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த எத்தகைய தியாகத்தையும் அ.தி.மு.க., செய்யும். விவசாயிகள் நலனை காக்க உறுதுணையாக இருப்போம்.
இங்கு சிப்காட் தொழிற்பூங்கா வராது என, தி.மு.க., அரசு சட்டசபையில் அறிவிக்கவும், பொதுமக்கள், விவசாயிகள் பதட்டம் தணிக்கவும், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில் குரல் கொடுப்போம்,” என்றார்.