கூலி உயர்வு வழங்காததால் விசைத்தறியாளர் ஏமாற்றம்

0
100

பல்லடம்,:கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வாயிலாக, நாள் ஒன்றுக்கு, 1 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி ஆகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கும் கூலி அடிப்படையில் தான், விசைத்தறி கூடங்கள் இயங்குகின்றன. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

கடந்த, 2014க்கு பிறகு ஒப்பந்தம் முறையாக பின்பற்றப்படுவதில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கூட, கூலி உயர்வு கிடைக்கவில்லை.

தற்போதுள்ள சூழலில், 2021 பேச்சின்படி, உயர்த்தப்பட்ட கூலியாவது கிடைக்க வேண்டும். தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.