தடுப்பு சுவரில் பைக் மோதல் வாலிபர் பலி; ஒருவர் காயம்

0
20

கோவை; சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பைக் மோதியதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

கோவை, மருதமலை ரோட்டில் இரு நாட்களுக்கு முன் மாலை பைக்கில், இரு வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். வேளாண் கல்லூரியின் நான்காவது வாசல் அருகே, கட்டுப்பாட்டை இழந்த பைக், ரோட்டில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

பைக்கில் வந்த வாலிபர்கள், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை, அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து மேற்கு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில், அவர்கள் இருவரும் கோவை பீடம்பள்ளி தாயம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், 21, மற்றும் அவரது நண்பர் பிரான்சிஸ் ஜோ, 23 எனத் தெரிந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் ராஜ் உயிரிழந்தார். பிரான்சிஸ் ஜோதொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.