கோவை; ‘பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி, தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கவில்லை’ என கூறி, மாநகராட்சி அலுவலகத்தை துாய்மை பணியாளர்கள், நேற்று முற்றுகையிட்டனர்.
கோவை மாநகராட்சியில், 2,083 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 4,287 ஒப்பந்த பணியாளர்கள், 1,209 டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என மொத்தம் 7,579 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோருக்கு தனியார் நிறுவனம் மூலம் சம்பளம், தீபாவளி போனஸ் உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையின்போது குறைந்தபட்சம் 8.33 சதவீதம் போனஸ் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது.
ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா ரூ.4,700 போனஸ் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. சில தொழிலாளர்களுக்கு, அத்தொகை முழுமையாக கிடைக்கவில்லை என, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி, மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டன
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.850 சம்பளம் வழங்க வேண்டும்; ரூ.600 தான் வழங்கப்படுகிறது. மீதமுள்ள, 200 ரூபாய்க்கு கணக்கு சொல்வதில்லை. இ.எஸ்.ஐ., – பி.எப்., பிடித்தம் என சொல்கிறார்கள்; அதற்குரிய ரசீது தருவதில்லை. இதற்கு தீர்வு காணும் வரை போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.