தமிழக – கேரளா எல்லையில் தீவிரம் மருத்துவக்கழிவு , நக்சல் நடமாட்டம் ‘டூ இன் ஒன் கண்காணிப்பு!’

0
21

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், காரமடை அருகே கேரள மாநில எல்லைகளான கோபனாரி, முள்ளியில் உள்ள சோதனைச் சாவடிகளில், பிளாஸ்டிக் மருத்துவ கழிவு வாகனங்கள் வருகிறதா என போலீசார் கிடுக்கிப்பிடி சோதனை நடத்தினர். மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்தும், தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள், மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க, கோவை மாவட்ட நிர்வாகத்தால், 14 சோதனைச்சாவடிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, காரமடை அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள கோபனாரி, முள்ளி சோதனைச்சாவடிகளில் போலீசார், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனுடன் சேர்ந்து, மாவோயிட் நடமாட்டம் உள்ளதா எனவும் கண்காணிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு

போலீசார் கூறியதாவது:-

கேரளா மாநில வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. இதையடுத்து, கோபனாரி சோதனைச்சாவடியில், தேடப்படும் 27 மாவோயிஸ்ட்களின் புகைப்படம் மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது.

கோபனாரி, முள்ளியில் இந்த மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் தொடர்பாக தொடர் சோதனைகள் நடக்கின்றன. அதே போல், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏதேனும் வாகனங்களில் கொண்டுவரப்படுகிறதா எனவும் தமிழக போலீசார் கண்காணிக்கிறோம். குறிப்பாக முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடிகளை சுற்றியுள்ள அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டைபுதுார், பட்டிசாலை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் இருந்து இச்சோதனை சாவடிகள் வழியாக கேரள செல்லும் வாகனங்களுக்கும், அங்கிருந்து மருத்துவ கழிவுகளை கொண்டுவரக்கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

24 மணி நேர கண்காணிப்பு

கேரள எல்லையில் உள்ள கோபனாரி, முள்ளி வழியாக மருத்துவ கழிவுகள் வருகிறதா என, 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம். மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். வன பணியாளர்கள் தொடர் ரோந்திலும் ஈடுபட்டுள்ளனர்.

— ரஞ்சித், வனச்சரகர், காரமடை.

 

காய்கறி ‘லோடு’ பாதிப்பு?

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் இருந்து கோபனாரி வழியாக தினமும், 300 முதல் 400 டன் அளவிலான காய்கறிகள், வாழைப்பழங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.இந்த தொடர் சோதனைகளால், இங்கிருந்து கேரள செல்லும் வாகனங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. காய்கறி, பழங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கேரளாவில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என லோடு வண்டி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.