கோவை அருகே ரூ.2.25 கோடி பணக்கட்டுகள் சாக்கு மூட்டைகளில் சிக்கியது

0
14

சூலுார் : கோவை கருமத்தம்பட்டி அருகே, லாட்டரி வியாபாரி வீட்டில், சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.2.25 கோடி பணம் சிக்கியது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம், செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 42; திருமணம் ஆகவில்லை. தனது தாயுடன் வசித்து வரும் இவர், தமிழக – கேரளா எல்லை வாளையாறில் உள்ள ஒரு லாட்டரி கடையில் வேலை செய்து வருகிறார். அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் உள்ள ஊர்களில், லாட்டரி விற்று வந்துள்ளார்.

கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின்படி, மாவட்டத்தின் பல பகுதிகளில் லாட்டரி வியாபாரிகள் வீட்டில் நேற்று சோதனை நடந்தது.

தனிப்படை போலீசார் மற்றும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார், நாகராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில், சாக்கு மூட்டைகளில், பணக்கட்டுகள் இருப்பதை கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை இறக்கி, நான்கு பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு, எட்டு மணி நேரம் எண்ணினர். அதில், 2 கோடியே, 25 லட்சத்து, ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது. அதில், 2,000 ரூபாய் மட்டும் 2 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் இருந்தது.

நாகராஜிடம் விசாரித்ததில், அவர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.

லாட்டரி விற்றதில் சம்பாதித்தது, நிலம் விற்றதில் சம்பாதித்தது என, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

பணம் மற்றும் இரு மொபைல்போன்கள், ஒரு இரு சக்கர வாகனம், 1,900 லாட்டரி சீட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.