பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு; உடனடியாக நடத்த அரசுக்கு கோரிக்கை

0
14

கோவை; தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வை, உடனடியாக நடத்தி பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்று, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு பெற்று, பணிக்கு காத்திருப்போர்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கலெக்டர் கிராந்திகுமாரிடம்கொடுத்தமனுவில், அவர்கள் கூறியுள்ளதாவது:

தமிழக அரசுப்பள்ளிகளில், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்ப, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2023 அக்.,ல் அறிவிப்பாணை வெளியிட்டது.

2024 பிப்.,ல் தேர்வு நடத்தியது, மே மாதம் முடிவுகள் வெளியானது. ஜூனில்சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது. ஆக., மாதம் உத்தேச தேர்வு பட்டியல் வெளியிட்டது. ஆனால் இனியும் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறவில்லை.

ஆனால், ஆதிதிராவிட பள்ளிகளுக்கு பலரும், தேர்வாகி பணியில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.

இந்த அரசு வேலை, எப்படியும் கிடைக்கும் என்று நினைத்து, ஏற்கனவே தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த சூழலில், அப்பணியிலிருந்து பலரும், தங்களை விடுவித்துக்கொண்டனர்.

தற்போது எந்த பணியும் இல்லாமல், நிற்கதியாய் நிற்கின்றனர். பலரும் 45 வயதை கடந்துவிட்டனர். பணிக்காலமும் குறைவு. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி, பணி நியமனம் செய்யும் பணிகளை வேகமாக துவக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.