கோவை; ‘குடும்பத்தோட படத்துக்கு போறோம், ஹோட்டலுக்கு போறோம். ஆயிரக்கணக்கில் செலவளிக்கிறோம். ஆனா, அரசு தரப்பில் உள்ள, 20 ரூபாய் இன்சூரன்ஸ் எடுக்க முக்கியத்துவம் தர்றதில்லை,” என்கிறார், மாவட்ட முன்னோடி வங்கி நிதிசார் மைய கவுன்சிலர் ரவி.
மத்திய அரசு சார்பில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற பெயரில், ஆயுள் காப்பீடு திட்டமும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற பெயரில், விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தாலும், விழிப்புணர்வு பலருக்கு இல்லை.
இதுகுறித்து, மாவட்ட முன்னோடி வங்கி நிதிசார் மைய கவுன்சிலர் ரவி நம்மிடம் கூறியதாவது:
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம், 20 ரூபாய் மற்றும் 436 ரூபாய் விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில், பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இதற்கு வங்கியில், ஒரு விண்ணப்பம் கொடுத்தால் போதும். ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக, மே, ஜூன் மாதங்களில் அவரவர் வங்கி கணக்கில் இருந்து, தாமாக எடுத்துக்கொள்ளப்படும்.
இதில், 20 ரூபாய் என்பது விபத்து காப்பீடு, சாலை விபத்து மட்டுமின்றி பாம்பு, நாய் கடித்து இறப்பு ஏற்படுதல், கீழே விழுவது, மின்சாரம் தாக்குவது, வனவிலங்கு தாக்குதல் என அனைத்துக்கும் பொருந்தும்.
விபத்து ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டால், வாரிசுகளுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். தவிர, விபத்தில் உடல் உறுப்பு இழப்பு ஏற்பட்டாலும், இழப்பீடு பெறமுடியும். இக்காப்பீடு, 18-70 வயதுள்ள யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.
18 வயது முதல் 50 வயதுடையவர்கள் ஆயுள் காப்பீட்டை எடுக்க தகுதியானவர்கள். எந்த பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டாலும் வாரிசுகளுக்கு, 2 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை கிடைக்கும்.
பாதிப்புகள் ஏற்பட்டு, 60 நாட்களுக்குள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால், எளிதாக தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.
அனைவரும், இந்த இரண்டு காப்பீடுகளையும், ஏதேனும் ஒரு வங்கியில் எடுத்துக்கொள்வது அவசியம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.