பெ.நா.பாளையம்; பள்ளியில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தான அறிவுரைகளை, பள்ளி கல்வித்துறை வழங்கி உள்ளது.
மாநில திட்ட இயக்கம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை, பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, நல வாழ்வும் சுகாதாரமும், உளவியல் மற்றும் சமூக நோக்கங்கள், குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு தரப்பினரின் கடமைகளும், பொறுப்புகளும், கண்காணித்தல், குழந்தை பாதுகாப்பு ஆகியவை குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு விதிமுறைகள்
இதில், பள்ளி கட்டடம், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு உகந்ததாக உள்ளதா என, உள்ளாட்சி நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். மழலையர் மற்றும் ஆரம்ப நிலை வகுப்புகள் தரைத்தளத்தில் இருக்க வேண்டும். வகுப்பறையில், காற்றோட்டம் நன்றாக இருக்க ஜன்னல்களும், கதவுகளும் திறந்தே வைத்திருக்க வேண்டும்.
பள்ளி ஆய்வகத்தில் ஆயுள் காலம் முடிந்த எந்த ஒரு வேதிப்பொருளும், ஆய்வகத்தில் வைத்திருக்கக் கூடாது. ஆய்வகங்களில் முதலுதவி பெட்டி பயன்பாட்டில் வைக்கப்பட வேண்டும். சமையலறையில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் கழிவறைக்கு அருகில் எரியூட்டி அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு பாதை அமைக்க வேண்டும். தொற்று நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி போன்றவற்றிற்கு நோய் தடுப்பு முகாம்கள் அமைத்து, தடுப்பூசிகளை போட வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் அளிப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி அளவில் புகையிலை, மது மற்றும் போதை பொருட்களின் தீங்கு குறித்தும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும்.
ரகசியம்
பள்ளி குழந்தையின் உடலை தவறான நோக்கில் உற்று நோக்குதல், முறையற்ற பாலியல் சார்ந்த தகவல்களை உள்ளடக்கிய கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்றவற்றை குழந்தைகளுக்கு அனுப்புதல், பாலியல் அடிப்படையிலான அவமானங்கள் ஏற்படுத்துதல், குழந்தையின் உடல் பாகங்களை தகாத முறையில் தொடுதல், கிள்ளுதல், குழந்தை
திருமணத்திற்கு கட்டாயப்படுத்துதல், உடல் ரீதியான அல்லது மனரீதியான பாலியல் தொந்தரவுகள் அளித்தல் உள்ளிட்டவை குழந்தையை பாதிக்கின்ற காரணங்களாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் சார்ந்து குழந்தை அளித்த அனைத்து விபரங்களும் ரகசியமாக இருக்க வேண்டும். தொடர்புடைய அலுவலர்களை தவிர, மற்ற ஆசிரியர்களுக்கு, ஊழியர்களுக்கு மாணவர்களுக்கு பிற பெற்றோர்களுக்கு தெரிவிக்க கூடாது.
மிகுந்த கவனத்துடன் விபரங்களை கையாள வேண்டும். பாலியல் குற்றங்கள் நடந்தால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, உடனடியாக அலுவலர்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
போக்சோ சட்டம், 2012ன் படி பாலியல் வன்முறை கொடுமைக்கு உள்ளான குழந்தையின் அடையாளம் மற்றும் கொடுத்த வாக்குமூலத்தின் ரகசிய தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.