தமிழக அரசு எதிர்ப்பு; ஆசிரியர்கள் வரவேற்பு : ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ ரத்து

0
16

கோவை; ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ‘ஆஸ் பாஸ்’ முறை இருந்துவந்த நிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, தற்போதுரத்து செய்யப்பட்டுள்ளதற்கு, வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில், 5 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ‘ஆஸ் பாஸ்’முறை கிடையாது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இரு மாதங்களில் துணை தேர்வு நடத்தப்படும். மீண்டும் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்க முடியாது!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் அருளானந்தம்:

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை இருந்து வருகிறது. இதற்கு முன்பு ஒரே வகுப்பில் இரண்டு, மூன்றாண்டுகள் தேர்ச்சி பெறாமல் படித்தவர்கள் உண்டு.

இதனால், அவர்களது கல்வியறிவு குறையும் வாய்ப்பிருந்தது. இடைநிற்றல் மாணவர்கள் எண்ணிக்கையும், 100க்கு, 70 வரை இருந்துள்ளது. தற்போது, பிளஸ்2 வகுப்பில் ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத்தேர்வு அடிப்படையில், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு தேர்வு செய்கின்றனர்.

பொது தேர்வில், 500க்கு, 490 மதிப்பெண் எடுத்தாலும், நுழைவுத் தேர்வு வைத்து மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்பதை ஏற்க முடியாது. முடிந்தால், 12ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை கொண்டு வருவது நல்லது.

இவ்வாறு, அவர் கூறினார்.

ரவேற்கிறோம்!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்:

புதிய கல்வி கொள்கையின்படி, மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. எப்படியோ எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்று விடுவார்கள் என்பதால் பல பள்ளிகளில் பாடம் சரியாக நடத்தப்படுவதில்லை. இனி தகுதி இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

இரு மாதங்களில் நடத்தப்படும், துணை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் தொடரவேண்டும்

தோல்வி அடைந்தவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்கவும் வாய்ப்புகள் குறைவு என்பதால், இடைநிற்றல் இருக்காது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தரமான கல்விக்கு வழிவகுத்துள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

இவரைப் போல், பல ஆசிரியர்களும் புதிய அறிவிப்பை வரவேற்றுள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று மாலை வெளியிட்டுள்ள

அறிவிப்பு, மாணவ சமுதாயத்தின் மீது இந்த அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையை காட்டுவதாக, விபரமறிந்த ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

‘இப்படி வடிகட்டுவது நல்லது’

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க பொருளாளர் ஆனந்த் கூறுகையில், ”’ஆல் பாஸ்’ முறையால், 9 முதல், 12ம் வகுப்பு வரும் மாணவர்கள் திணறுகின்றனர். மாணவர்கள் சிலருக்கு எழுதக்கூட தெரிவதில்லை. எட்டாம் வகுப்பில் தகுதியான மாணவர்கள் தேர்ச்சி செய்து ‘பில்டர்’ செய்யும்போது, உயர் வகுப்புகளில் அவர்கள் சிரமப்பட மாட்டார்கள். கூட்டல்,கழித்தல் போன்ற அடிப்படையே இல்லாமல் வரும்பொழுது, அவர்களை மேம்படுத்துவது சிரமமாகஇருக்கிறது. அவர்களது கல்வித்தரமும் மேம்படும்,” என்றார்.