‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… ‘ குறைகளைக் கூற மக்களுக்கு வாய்ப்பு

0
17

அன்னுார் : அன்னூர் தாலுகாவில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம், வரும் 26ம் தேதி நடக்கிறது.

தமிழக அரசு, ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி கலெக்டர், ஒவ்வொரு மாதமும், ஒரு தாலுகாவில் தங்கி கள ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டத்தின் படி, வரும் 26ம் தேதி காலை 9:00 மணி முதல், 27ம் தேதி காலை 9:00 மணி வரை, கோவை கலெக்டர் கிராந்தி குமார், அன்னூர் தாலுகாவில் தங்கி கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

இதை முன்னிட்டு, 26ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட துறை அலுவலர்கள் 26ம் தேதி காலை 11:00 மணி முதல், 12:00 மணி வரை, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகின்றனர்.

அன்னூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் மாலை 4 :00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மக்களிடம் மனு பெறுகிறார். அன்னூர் தாலுகாவில் உள்ள 30 வருவாய் கிராமங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.