கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் ஆட்சிமொழி சட்டவார விழாவில், பயிற்சி பெற்ற அரசுப்பணியாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்பரசி தலைமை வகித்தார். கம்ப்யூட்டரில் தமிழை எப்படியெல்லாம் எளிமையாக பயன்படுத்தலாம் என்பது குறித்து, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி இணை பேராசிரியர் குணசீலன் பயிற்சியளித்தார்.
இரண்டாம் நாளில், தமிழ்மொழியை எப்படியெல்லாம் கையாளலாம் என்பது குறித்த தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் திருநாவுக்கரசு பேசினார். மூன்றாம் நாளான நேற்று, தமிழில் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எடுப்பது குறித்து, அன்னுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பீர் முகமது உரை நிகழ்த்தினார். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும், தமிழ்த்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.