வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல் : பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு

0
16

கோவை: வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பருவ மழை இன்னும் முடியவில்லை எனவும், வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை, இம்முறை நன்றாக பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பொதுவாக, வடகிழக்குப் பருவமழை டிச., 20ம் தேதியையொட்டி, முடிவுக்கு வரும்.

தற்போது, கணிக்க முடியாத பருவ நிலை மாறுபாடுகள் நிகழ்கின்றன. சில சமயங்களில், வலுவான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகலாம். ஜன., 15ம் தேதிக்குப் பிறகு கூட, இதுபோன்று நிகழ்வதுண்டு.

இதுவரை இந்த பருவத்தில், 3 தாழ்வழுத்த நிலைகள் உருவாகின. இனியும் உருவாகலாம். எனவே, வடகிழக்கு பருவமழை நீடிக்கலாம். அதே சமயம், தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, வறண்ட வானிலை நிலவுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

வானம் மேகமூட்டமின்றி, தெளிவாக இருக்கும்போது, பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவு 10:00 மணி முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். வரும் நாட்களில் பனிப்பொழிவின் தாக்கம், அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, கொண்டைக்கடலை போன்ற, பனிக்காலத்தில் வளரும் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். பனிக்காலத்தில், பயிர்களை பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

எனவே, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனவரிக்குப் பிறகு, குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாம். நீர் இருப்பைப் பொறுத்து, பயிர்களைத் தேர்வு செய்யலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.