கோவை: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில்,டாடாபாத் பகுதியில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார், 1.26 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், மருத்துவ முகாமில் அடையாள அட்டை பெற்றுத்தருதல், உதவி உபகரணங்கள் பெற்று தருதல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும், 1600 சிறப்பு பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எங்களுக்கு பி.எப்., பிடித்தம், மருத்துவ விடுப்பு, இ.எஸ்.ஐ., விபத்து இழப்பீடு, நிவாரணம், பணி பாதுகாப்பு, பணி ஆணை உள்ளிட்ட எந்த சலுகையும் இல்லை.
மணிப்பூர், ஹரியானா, ஆந்திரா, டில்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுநர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் பணி நிரந்தரம் அளிக்க, பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மாவட்ட தலைவர்கள் துண்டையன், செல்வக்குமார், சிவப்பிரகாஷ், ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.