மேற்கு புறவழிச்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்க ஆர். டி.ஓ., விடம் மக்கள் வாக்குவாதம்

0
15

தொண்டாமுத்தூர்: கோவை மேற்கு புறவழிச்சாலையில், உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்கு, சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பொதுமக்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அருகே துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., தூரத்துக்கு, 15 வருவாய் கிராமங்கள் வழியாக, மேற்குபுறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. தற்போது, மதுக்கரை முதல் செல்லப்பகவுண்டன்புதூர், சிறுவாணி ரோடு வரையிலான முதல் ‘பேக்கேஜ்’ 11.80 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

கிராம இணைப்பு சாலை பகுதியில் செல்லும் மேற்கு புறவழிச்சாலையில், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் வீடுகளுக்கும், விளை நிலங்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால், மேற்கு புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி, 10 கிராம மக்கள் இணைந்து, ‘மேற்கு புறவழிச்சாலை பாதுகாப்பு குழு’ துவங்கினர். இக்குழுவினர், சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இம்மனு குறித்து விசாரிக்க, தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் நியமிக்கப்பட்டார். மேற்கு புறவழிச்சாலையில், நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது, மதுக்கரை முதல் செல்லப்பகவுண்டன்புதூர் வரை உள்ள மேற்கு புறவழிச்சாலையில், 9 இடங்களில், சர்வீஸ் சாலை அமைக்க, விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தினர்.

அந்த 9 இடங்களிலும், ஆர்.டி.ஓ., நேரில் பார்வையிட்டு, மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது, மேற்கு புறவழிச்சாலையில் நீர்வழித்தடத்திற்காக கட்டப்பட்டுள்ள கல்வெர்ட்டுகள் பல இடங்களிலும், நீர் வழிப்பாதைக்கு ஏற்றவாறு கட்டப்படாமல், தவறுதலாக மாற்றி கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சார்வீஸ் ரோடு அமைக்க தேவையான நிலம் ஒதுக்கப்படாமல், சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, விவசாயிகள், நெடுச்சாலைத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், 9 பகுதிகளில், சாய்வு தள சாலை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக, கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆர்.டி.ஓ.,தெரிவித்தார்.