மேட்டுப்பாளையம்; ”பெண்கள் தங்களுக்கு எதிராக ஏதாவது குற்றம் நடந்தால், தயங்காமல் நேரடியாகவே கோவையில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு வந்து புகார் அளிக்கலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் இலவசமாக வழக்கப்படும்,” என கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் தெரிவித்தார்.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, காரமடையில் உள்ள குட்செப்பர்டு ஹெல்த் எஜூகேஷன் மையத்தில் நேற்று நடந்தது.
இதில், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் பேசியதாவது:-
பெண்களுக்கு என நிறைய சட்டங்கள் உள்ளன. இதன் நோக்கம், பெண்களுக்கு எதிராக எந்த குற்றங்களும் இழைக்கப்பட கூடாது என்பதற்காக. அப்படி நடந்தால், பெண்களுக்கு இழப்பீடு கொடுத்து சரியான நிலைக்கு அவர்களை மீண்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக.
பெண்கள் தங்களுக்கு எதிராக எதாவது குற்றம் நடந்தால், தயங்காமல் நேரடியாகவே கோவையில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு வந்து புகார் அளிக்கலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் இலவசமாக வழக்கப்படும்
போதைப்பொருள் நடமாட்டம் பெருகிவிட்டது. சில தந்தைகளே தன் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றம் இழைக்கின்றனர். கஞ்சா சாக்லேட், போதை மாத்திரை என பல பரிமாணங்களில் போதைப்பொருள் வந்துவிட்டது. இது மூளையை மழுங்கடைத்துவிடுகிறது. குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள், தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள், குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். நம் குடும்பம் மட்டுமில்லை, உறவினர்கள் குழந்தைகளையும் கண்காணிக்க வேண்டும்.
போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தால், அவர்களை திட்டுவது, அடிப்பதினால் பயன் இல்லை. போதை மறுவாழ்வு மையத்தை அணுகி அவர்களை அங்கிருந்து மீட்கலாம். தீபாவளி சமயத்தில் கூட நிறைய பசங்க சொந்த ஊருக்கே போகவில்லை. போதைப்பொருள்களை தங்களது அறைகளில் வைத்து கொண்டு பயன்படுத்தி அங்கேயே இருந்துள்ளனர்.
போலீசார் சோதனை நடத்தி, போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். கல்வி வளாகங்களில் போதைப்பொருள் இருந்தால் கல்வி நிறுவனங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிராக அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த வக்கீல்கள் ஸ்டேபினா ரோஸ், கீர்த்தனா உள்ளிட்டோர், பெண் வன்கொடுமை, பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை போன்றவை நடந்தால் 15100 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை அழைத்து சட்ட உதவிகள் பெறலாம், அதே போல் 181 என்ற இலவச எண்ணை அழைத்து, போலீஸ், மருத்துவம், ஆலோசனை, சட்ட உதவி என அனைத்தும் பெறலாம், என தெரிவித்தனர்.
இதில், குட்செப்பர்டு ஹெல்த் எஜூகேஷன் பொது இயக்குனர் சிஸ்டர் அனிலா மேத்யூ, இயக்குனர் சிஸ்டர் டீப்தி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.