கோவை; வாலாங்குளம் அருகில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருந்த சில இளைஞர்களிடம் சோதனை செய்ததில், அவர்களிடம் 750 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் கணபதியை சேர்ந்த ஹரிஹரன், 24, ரத்தினபுரியை சேர்ந்த சண்முக கிருஷ்ணன், 24 என்பதும், ரத்தினபுரியை சேர்ந்த சூர்யாவிடம் இருந்து கஞ்சா வாங்கியதும் தெரிந்தது.
அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி அருகில் நின்றிருந்த சூர்யாவை போலீசார் பிடித்தனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில், 20 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் சூர்யாவை கைது செய்து, ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
விசாரணையில், சூர்யா, 24 தனது நண்பர்களான ஜோஸ்வா, பார்த்தசாரதி, சூர்யா, வினீஸ், அசார் ஆகியோருடன் சேர்ந்து வெளிமாநிலங்களுக்கு சென்று, கஞ்சா வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் ஹரிஹரன், சண்முக கிருஷ்ணன், சூர்யா ஆகிய மூன்று பேர் மீதும், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்து இருப்பதாக கூறி, நீதிமன்ற வளாகத்தின் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரேஸ்கோர்ஸ் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.