கோவை; கோவை நகர்ப்பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. ஏப்., மாதம் இக்கிடங்கில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க மாநகராட்சியில் இருந்து, 76.70 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக, மாமன்ற கூட்டத்தில் கணக்கு காட்டப்பட்டது.
அதில், 11 நாட்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்காக, 27 லட்சத்து, 51 ஆயிரத்து, 678 ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கான செலவு சீட்டு மற்றும் தீயை அணைக்க, எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்கிற விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், குறிச்சி – வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன், மாநகராட்சியிடம் கேட்டிருந்தார்.
தெற்கு மண்டல உதவி கமிஷனர் அளித்த பதிலில், ‘தீயை அணைக்க செய்த செலவு ரசீதுகள், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; ஆய்வு முடிந்ததும் ரசீது நகல் வழங்கப்படும்’ என, தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மேல்முறையீட்டு அலுவலரான, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமாருக்கு, மேற்கண்ட தகவல் கேட்டு விண்ணப்பித்தார்.
அதற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ‘தீயை அணைக்க செய்த செலவு தொகை ரசீது நகல் வழங்குவது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி, கருத்து கோரப்பட்டது. ரசீது நகல் வழங்கினால், தங்களது நிறுவனங்களுக்கு தொழில் ரீதியாக பாதிப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதனால், ரசீது நகல்களை வழங்க இயலவில்லை’ என, பதில் அளித்திருக்கிறார்.
அரசு துறைகளின் செயல்பாடுகள் ஒளிவு மறைவின்றி செயல்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கும் தகவல்கள் வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில், பதிவேட்டில் உள்ள தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் கேட்கிறார். அதை கொடுக்க மறுக்கும் அதிகாரி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, கருத்து கேட்க அவசியம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏன் வந்தது என்கிற சந்தேகம் எழுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம், தங்களுக்கு தொழில் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என, ஆட்சேபனை தெரிவித்திருப்பதாக, துணை கமிஷனர் சிவக்குமார் கூறியிருக்கிறார்.
அந்நிறுவனம் வழங்கிய ரசீது நகல்களை வெளியிடுவதால், எவ்வகையில் தொழில் பாதிக்கும்; பில் நகல் வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆட்சேபனை தெரிவிக்கிறது என்றால், வரி ஏய்ப்பு செய்திருக்கிறதா அல்லது பில்கள் போலியானவையா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இதுதொடர்பாக, மேல் முறையீட்டு அலுவலரான துணை கமிஷனர் சிவக்குமார் விளக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.