கோவையில் இன்று ‘தினமலர்’ சிறப்பு நிகழ்ச்சி ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,

0
32

கோவை: ‘தினமலர்’ நாளிதழ், வஜிரம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் வழங்கும், ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,’ நிகழ்ச்சி, கோவை, பீளமேடு, நவ இந்தியா ரோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்.,- ஐ.ஆர்.எஸ்., உட்பட நாட்டின் உயரிய அரசுப் பணியிடங்களுக்கான தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

இப்பணியிடங்களுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவது, பலரது கனவாக உள்ளது. அவர்களின் கனவை நனவாக்கும் விதத்தில், ‘தினமலர்’ நாளிதழ், வஜிரம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் நிறுவனத்துடன் இணைந்து, ‘நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,’ நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்நிகழ்வில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், தேர்வுக்கு தயாராவது எப்படி, விருப்பத் தாள்களைத் தேர்வு செய்வது எப்படி, பிரிலிமினரி, மெயின் தேர்வு, இன்டர்வியூவில் சாதிப்பது எப்படி, தேர்வுக்குத் திட்டமிடுவது எப்படி என்பன உள்ளிட்ட விளக்கங்கள், நிபுணர்களால் அளிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு என்ன படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எப்போது, எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், பிரபல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

சிறப்பு விருந்தினர்களாக, தமிழக காவல்துறை முன்னாள் டி.ஜி.பி., ரவி, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், வஜிரம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் ஆசிரியர் ஸ்ரீவட்சன் ஆகியோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்துகிறது.

 

வழிகாட்டி புத்தகம் இலவசம்

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்த, வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.அனுமதி இலவசம். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 9:15 மணிக்கே அரங்குக்கு வந்து, இருக்கையை உறுதி செய்து கொள்ளவும். நிகழ்ச்சி மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.