சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல் : டிஜிட்டல் அரெஸ்ட் என்பதே கிடையாது முகம் இல்லா திருடர்கள்!

0
71

பெ.நா.பாளையம்: சைபர் கிரைம் போலீசில், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பதே கிடையாது. இணைய வழியாக திருடப்படும் பணம், வெளிநாடுகளில் பதுக்கப்படுகிறது என, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரியநாயக்கன்பாளையத்தில் தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு சுய தொழில் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறது. மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், அவ்வப்போது நடத்துகிறது.

இம்மையத்தில் சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை மாவட்ட சைபர் கிரைம் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஆனந்த் பங்கேற்று பேசினார்.

புகார்

அதில், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பதே கிடையாது. இந்த வார்த்தையை யாராவது கூறி, பணம் பறிக்க முயன்றால், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வேண்டும். சமீபத்தில், ஒரு நபரிடம் மும்பையில் இருந்து இயங்கிய கும்பல் ஒன்று, டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த, 1.16 கோடி ரூபாயை அபகரித்தனர். இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் கும்பல், அப்பாவி நபர் ஒருவரை பலிகடா ஆக்குகின்றனர். அப்பாவி நபரின் பெயரில் அவருக்கு சிறு தொகையை கொடுத்து, அவருடைய ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை பயன்படுத்தி, மோசடியாக வங்கி கணக்குகளை துவக்கின்றனர்.

அவரிடம் ஏ.டி.எம்., கார்டு, பாஸ்வேர்ட் ஆகியவற்றை பெற்றுக் கொள்கின்றனர். மோசடியாக திருடப்படும் பணம், அப்பாவி நபரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. புகாரின் பேரில் வங்கி கணக்கு நபர் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டால், அப்பாவி நபர்களே இதில் சிக்குகின்றனர்.

இணைய வழியில் மோசடியாக பெறப்படும் பெருந்தொகைகள் சீனா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு மாற்றம் செய்யப்படுகின்றன. வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுவதோ, மற்றவர்களுக்கு விற்பதோ சட்டப்படி குற்றம்.

அனுமதிக்கக் கூடாது

நமது வங்கி கணக்கை நாம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமக்கு பதிலாக யாரையும், பயன்படுத்த அனுமதிக்க கூடாது. சிலர் நமக்கு, 5 லட்சம் ரூபாய் கடன் தயாராக உள்ளது விபரங்களுக்கு அவர்கள் கொடுத்துள்ள ‘லிங்கை’ திறந்து விபரங்களை பதிவு செய்யுமாறு கூறுவர்.

பின்னர், பத்தாயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம் என கடன் அப்ரூவல் ஆக செலுத்துமாறு கூறுவர். ஒரு லட்ச ரூபாய் செலுத்திய பின்பு ‘லிங்கை’ ஒரே அடியாக மூடி விடுவர்.

சைபர் கிரைம் வாயிலாக பணத்தை இழக்கும் நபர்கள், 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தியா முழுமைக்கும் இது ஒரே எண் என்பதால் புகார் செய்பவர்கள், அந்த நம்பர் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து போன் செய்து புகாரை பதிவு செய்ய வேண்டும். சில போலி நிறுவனங்கள் போலியாக அலுவலர்களை நியமனம் செய்வதாக கூறி, ஆயிரம் ரூபாய் அனுப்புகிறோம். அதில், 200 ரூபாய் கமிஷன் எடுத்துக் கொண்டு, 800 ரூபாயை திருப்பி அனுப்புங்கள் என ஆசை வார்த்தை கூறுவர். நிச்சயமாக அது மோசடி நிறுவனம் தான் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.இவ்வாறு, சைபர் கிரைம் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த ஆனந்த் கூறினார்.

போலீசாருக்கு வந்த குறுந்தகவல்

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அதில் பங்கேற்ற கோவை மாவட்ட சைபர் கிரைம் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், இரண்டு லட்ச ரூபாய் கடன் தயாராக உள்ளது பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.இது குறித்து, சைபர் கிரைம் பிரிவு கோபாலகிருஷ்ணன் பேசுகையில், பொதுமக்கள் இது போன்ற குறுந்தகவல்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீடியோ பார்த்தால் பணம் வரும் என ஆசை வார்த்தை கூறுவர். அதில், பலியாகி பணத்தை இழப்பதோடு, சட்டவிரோத செயலுக்கு துணை போனதாக சிறைக்கு செல்லும் வாய்ப்பும் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.